கலைஞர் அறிவித்தால் கனியும் தமிழுலகம்

   
   

உலகச் செம்மொழி மாநாடு

     உன்னத மான ஏற்பாடு

செம்மொழி என்னும் சிறப்போடு

     செறிவாய் அமையும் மாநாடு

உலகச் செம்மொழி மாநாட்டில்

     ஓர்ந்து தேரும் முடிவெல்லாம்,

உய்யும் தமிழன் தமிழ்நாட்டில்

     உயிராய்த் தமிழைக் கொண்டிங்கு

கல்வி மொழியைத் தமிழாகக்

     கடவுள் மொழியைத் தமிழாக

ஆட்சி மொழியும் தமிழாக

     ஆகம வழியும் தமிழாகப்

பேச்சு மொழியும் தமிழாகப்

     பேரும் ஊரும் தமிழாக

வீட்டு மொழியும் தமிழாக

     விற்பனை உலகைத் தமிழாக

உண்மை உணர்வுடன் ஓர்ந்திங்கு

     உவந்து ஏற்கும் வாய்ப்பாக

அமைந்தால் விளையும் தமிழ்நிலமே

     அமிழ்தாய் கமழும் தமிழ் மணமே.

தமிழ்வழி பயின்றால் வாழ்வுண்டு

     தமிழக அரசில் பணியுண்டு

என்னும் உரிமை வழங்கிவிடின்

     இன்றே தமிழன் தமிழேற்பான்.

                (வேறு)

கணித்தமிழ்ப் பயன்பாட்டில்

     கண்ணுற்றோம் சங்கடங்கள்

எழுத்துருத் தரப்பாட்டில்

     இருக்கிறது குறைபாடு:

யுனிகோ டெழுத்துருவோ

     இணையத்திற் கேற்றதெனில்

இல்லையதன் பயன்பாடு

     ஏனையச் செயல்பாட்டில்.

அனைத்தெழுத்துத் தரப்பாடு

     அணி சேர்க்கும் எப்பணிக்கும்.

இவ்விரு தரங்களையும்

     ஏற்று அறிவித்தால்

இன்பமுறும் தமிழுலகம்

     ஏற்றமுறும் கணித்தமிழும்.

இன்னபல அறிவிப்பால்

     எழுச்சிபெறும்  தமிழ்நிலமும்.

தங்கத் தமிழ்மகனே

     தமிழுலகத் தலைமகனே

செம்மொழி மாநாட்டில்

     சிறப்பான முடிவுகளை

அறிவிப்பீர்! அணி செய்வீர்!

     அன்னைத் தமிழுக்கு.

 

தமிழ்நாட்டைத் தமிழ்நாடாய்

     தழைக்கச் செய்வதற்கு

அமிழ்தான நேரமிது

     அன்போடு செய்திடுவீர்.

கலைஞர் அறிவித்தால்

     கனியும் தமிழுலகம்.

வாழ்க பல்லாண்டு

     வளம் சேர்த்து வாழ்கவென

வாழ்த்துவனே வணக்கமுடன்

     வளமான தமிழமெழ!