புதியதோர்  உலகம் செய்வீர்

   
   

புத்திளம் உலகே நீங்கள்

     புதியதோர் உலகம் செய்வீர்!

புழுதிகள் போக்கி நீங்கள்

     புதியதோர் உலகம் செய்ய

போராட வேண்டாம் ஆங்கே

     பொருளெதும் தேவை யில்லை

தவறுடன் வாழும் மக்கள்

     தரத்தினை மாற்ற நீங்கள்

முயற்சிகள் எடுக்க வேண்டாம்

      முயலுவோர் மூழ்கிப் போவர்

என்னதான் செய்ய வேண்டும்

     என்றுளம் குழம்ப  வேண்டாம்

உங்களை மாற்றிக் கொண்டால்

     உலகமே மாறிப் போகும்!

 

அன்பினைப் பண்பாய்க் கொள்வீர்

     அறவழி நின்று வாழ்வீர்

ஒற்றுமை ஒன்றே வாழ்வின்

     உயிர்நாடி என்று கொள்வீர்.

பகையுளம் நீக்கி வாழ்வில்

     பண்புகள் யாவும் பெற்று

பசிப்பிணி போக்கும் நோக்கில்

     பகுத்துணும் பண்பைப் போற்றி

தாய்மொழித் தமிழைப் போற்றி

            தமிழரின் பழமை பேணி

பரந்தநல் உள்ளத் தோடு

            பார்புகழ் மக்க ளாக

உங்களை ஆக்கிக் கொள்வீர்

            உயர்குடி மக்க ளாவீர்

உங்களைப் போல உங்கள்

            உயிரனை மக்கட் செல்வம்

தங்கமாய் வளர்ந்து நாளை

            தரணியில் மலரச் செய்வீர்.

அப்படி யாக நீங்கள்

            அறவழி நின்றால் போதும்

 

பிறவழி வாழும் தீயோர்

            பிரிந்துயிர் நீத்த பின்னர்

புதியதோர் உலகம் தோன்றும்

            புழுதிகள் மறைந்து போகும்.

நாட்டினை ஆளப் போகும்

            நாளைய உலகே நீங்கள்

தெள்ளிய உள்ளத் தோடு

            உள்ளுவீ ராயின் நாளை

வள்ளுவன் வகுத்த நாடு

            வளமாக மலர்ந்தே தீரும்.

 

   
.. ..
  கல்லூரிப் பட்டமளிப்பு விழாக்களில் வழங்கிய கவிதை