தெள்ளிய நெஞ்சம் வேண்டும்

   
   

தெள்ளிய நெஞ்சம் வேண்டும்

     தெளிந்ததோர் நோக்கம் வேண்டும்

உட்பகை இன்றி மக்கள்

     உறவுகள் செழிக்க வேண்டும்

சமயங்கள் இணைய வேண்டும்

     சாதிகள் ஒழிய வேண்டும்

மதவெறி தன்னை மக்கள்

     மனத்தைவிட் டகற்ற வேண்டும்

குழுக்களாய்ப் பிரிந்து செய்யும்

     கொலைவெறி ஒழிய வேண்டும்

கொல்குறும் பாற்றும் கூட்டம்

     கூண்டோ டழிய வேண்டும்

ஒற்றுமை ஓங்க வேண்டும்

     ஒழுக்கமே சிறக்க வேண்டும்

அழுக்கா  றகல வேண்டும்

     அன்புளம் பெருக வேண்டும்

இனியவை கூற வேண்டும்

     இன்னா செயாமை வேண்டும்

பகுத்துணும் பண்பு  வேண்டும்

            பசிநோய் போக்க வேண்டும்

மன்னிய உலகில் எல்லா

            மக்களும் ஒருதாய் மக்கள்

என்பதை உணர வேண்டும்

            ஏதின்றி வாழ வேண்டும்

வள்ளுவன் வகுத்த நாடு

            வளமாக மலர வேண்டும்

இன்முகத் தோடு மக்கள்

            என்றுமே வாழ வேண்டும்

என்பதே நோக்க மாக

            இணைந்துநாம் வாழ்வோ மென்று

இன்றுநாம் உறுதி கொள்வோம்

            இந்திய நாட்டைக் காப்போம்.