இந்நாடு பொன்னாடாகும்

   
   

இந்திய நாடெங்கள் நாடு - இங்கு

     இல்லாத வளமென்ன தேடு.

செழிப்பான மண்வளத் தோடு - செல்வம்

     கொழிக்கின்ற வனவளக் காடு.

மங்காத நீர்வளத் தோடு - பெரும்

     மலைவளம் உண்டென்று பாடு.

 

கனிமங்கள் வளிமங்க ளோடு - புவியில்

     கல்லெண்ணெய் மண்ணெண்ணெய் என்று

எங்குமே இல்லாத அளவில் - வளங்கள்

     ஏராள மாயுள்ள நாடு. 

மக்கள் பெருக்குள்ள நாடு - உலகில்

     மகத்தான இடம்பெற்ற நாடு.

 

உலக நாடு களொடு  -  நிலை

     இரண்டில் உள்ளதிந் நாடு.

மக்களே நாட்டிற்குச் செல்வம் - அதனை

     மனித வளமென்று சொல்வர்.

பாரினிலே நல்ல நாடு - உயர்

     பண்புகள் பலவுள்ள நாடு.

என்றாலும் ஏனிந்த நாட்டில் -  மக்கள்

     ஏழையாய் வாழ்ந்திடல் வேண்டும்?

 

உள்ள குறையென்ன காணின் - இங்கு

     உழைப்பவர் மிகச்சிலர் காணீர்.

உயர்கல்வி தானிங்கு பெற்று - நாட்டில்

     உள்ளோரும் மிகச்சிலர்  காணீர்.

உற்ற உயர்கல்வி ஒன்றே - நாட்டை

     உயர்த்தும் வழியென்று கொள்வீர்.

அறிவார்ந்த சமுதாயம் மலரின் - வினை 

     ஆற்றலும் அவருடன் வளரின்

மக்கள் பெருக்கிந்த நாட்டில் - நல்ல

     மனித வளமாக  மலர்வர்

 

இந்நாடு  பொன்னாடாய் மாறும் - இங்கு

     ஏழ்மையே இல்லாமல் போகும்.
   
.. ..
 

சனவரி மாதம் 26-ஆம் நாள் 2009-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக குடியரசுதின கொடியேற்று விழாவில் வழங்கிய கவிதை